நடக்கத் தொடங்கி வீட்டுக்கு வெளியே போய் விளையாட எத்தனிக்கையில் தொடங்கியிருக்கலாம், பள்ளிக்கூட வாழ்வின் முதல்நாள் பக்கத்திலிருந்தவனின் புன்னகையில் பூத்திருக்கலாம், சத்துணவுக்கூடத்தின் அருகில் அடிபம்பில் தண்ணி பிடிக்க உதவியவனிடமிருந்து ஒட்டிக்கொண்டு வந்திருக்கலாம், தன் பணத்தில் முதல் சினிமாவை பார்க்க வைத்தவனிடமிருந்து கசிந்திருக்கலாம், தன் சைக்கிளில் முதல் சவாரியாக கூட்டிப்போனவன் காட்டியிருக்கலாம், தேர்வு நேரத்தில் காப்பியடிக்க காட்டி மாட்டிக்கொண்டவன் காப்பாற்றியபோது கண்டிருக்கலாம், வேலை தேடி அலைந்த நாட்களில் ஒரு தேநீரில் பசி போக்கியவன் புகட்டி இருக்கலாம், இப்போதும் எப்போதாவது ஊரிலிருந்து அழைத்து நலம் விசாரிப்பவனாய் இருக்கலாம் இந்த எல்லா தருணங்களிலும் நனைந்து, கலந்து, கசிந்துருகி, பிரிந்து, எதிர்பார்த்து, ஏங்கி, நசுங்கி, இன்னும் தொலைந்துவிடாமல் தொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு நிஜம் "நட்பு".
தொலைந்துபோன என் தூக்கங்களை தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்..! இந்த கடந்து போன நிமிடங்களில்...!
22 January 2021
நட்பின்றி அமையா வாழ்க்கை
24 September 2020
சொல்லப்படாத கதைகள்
"ஒரு ஊருல ஒரு ராஜாவாம்..." ன்னு தொடங்கும் கதைகளின் வழியே நாம் பார்த்திராத ராஜாக்களின் காலத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச்செல்ல நம் எல்லோருக்கும் கதை சொல்லிய தாத்தா பாட்டிகள் இருந்திருப்பார்கள், இப்போதும் இருப்பார்கள். இருள் கவ்விய இரவுகளில் சிம்னி விளக்கின் சிறு வெளிச்சத்தில் போர்வையை விட கதகதப்பான பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு விக்ரமாதித்தன் வேதாளத்தின் கதைகள், தேவதையும் கோடாரிகளும் கதை, பீர்பால் கதைகள், ராஜா ராணி கதைகள், காக்கா வடை "சுட்ட" கதைகள், தாத்தாவின் குறும்புத்தனங்கள் சொல்லும் கதைகள் எனக் கேட்ட நாட்களை கடலுக்குள் தவறவிட்ட தங்க நாணயம் போல மனதின் ஆழத்தில் காலம் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறது. அனுபவங்களை விவரிக்கவோ, அழகான கற்பனையை கதைகளாக மாற்றிக்கூறவோ எல்லோராலும் முடிந்துவிடுவதில்லை, அதற்கென ஒரு பொறுமையும் கேட்பவர்களைக் கதையோடு சேர்த்துக் கட்டிப்போடும் வல்லமையும் வாய்த்திருக்க வேண்டும். அப்படிக் கட்டுண்டு கிடந்த காலங்கள் இனி வாழ்வில் திரும்பக்கிடைக்குமா என்பதெல்லாம் பதில் தெரிந்த கேள்வி தான். கிடைக்காது என்பதே அதன் பதிலாகவும் இருக்கிறது. இப்போதும் பாட்டி, அம்மா பெரியம்மா, சின்னம்மான்னு சந்திக்கும் எல்லோரும் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை, பட்ட சிரமங்களை, அனுபவிக்க மறந்த சந்தோசங்களை, சேமித்து வைத்திருக்கும் கனவுகளை கதைகளைப்போல சொல்லுவதுண்டு. அவை வாழ்வியல் அனுபவங்களின் அடர்த்தியாக இருக்கின்றன. மனிதர்களின் மனங்களில் குவிந்து கிடக்கும் கதைகள் பலவுண்டு. கேட்பதற்கு காதுகள் கிடைக்கும் தருணங்களில் தான் அவை வெடித்துக்கிளம்புகின்றன. சொல்லப்படாத கதைகளில் மறைந்திருக்கும் சோகங்களை சொல்லாமல் புரிந்துகொள்ளும் மனங்கள் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. ஆணோ பெண்ணோ அப்படி வாழ்வின் வலிகளை விளக்கும்போது கைப்பேசியை நோண்டாமல், தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிடாமல், சமையலுக்குள் மூழ்கிப்போகாமல், குழந்தையைக் காரணம் காட்டி நகராமல் கொஞ்ச நேரம் காதுகொடுத்துக்கேட்கும் துணை தான் வாழ்வின் ஆகச்சிறந்த வரம். |
24 August 2020
நிறம் மாறும் உலகம்
எதையும் வேடிக்கை பார்ப்பதும், அந்த வேடிக்கை முடிந்த பின்பு அடுத்த வேடிக்கை நோக்கி விளையாடிக்கொண்டே நகர்ந்துவிடுவதுமாய் வாழ்ந்திருந்த வயதுகளில் நிரம்பிய நினைவுகளை மூளை மடிப்புகள் பொத்தி பொத்தி வைத்திருக்கும், அதை வளர்ந்த மனதோடு இணைத்து வைத்து அவ்வப்போது காலம் நம்மை நினைவுகளில் குழந்தையாக்கி கைப்பிடித்து கூட்டிப்போய் மீண்டும் பழைய காலத்தில் நிறுத்தும். கற்பனையின் உச்சத்தில் நின்றுகொண்டு நம் சிறுவயது நிகழ்வுகளை இப்போதிருக்கும் நாமே கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் உள்ளிருக்கும் ஆனந்தமென்பது உயிருக்குள் பூ பூக்கும் தருணத்திற்கு நிகரானது.
யானைதான் சிறுவயதில் பார்த்து வியந்த பிரம்மாண்டமான கம்பீரம். அந்த வயதில் யானையின் உருவம் ஒரு வித பயத்தைக் கொடுத்தாலும் பிடிக்காமல் போகாது. தூரத்திலிருந்தபடியேனும் அதை ரசிக்கச்சொல்லும், அம்மாவின் முந்தானைக்குள் பதுங்கியபடியோ, தாத்தாவின் பின்னால் ஒளிந்தபடியோ யானை கண்களை விட்டு மறையும் வரை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.
பவானி கூடுதுறையில் இருந்த வேதநாயகி என்னும் பெயர் கொண்ட யானைதான் நாங்கள் பார்த்து ரசித்த முதல் யானையாக இருக்கும். பண்டிகை காலங்களில் கோவிலுக்குள் இருந்தபடி ஆசிவழங்குவது, சாமி ஊர்வலத்துக்கு முன்னால் வரவேற்பளித்தபடி நடப்பது, தேர் போகும் தெருவெல்லாம் மணியோசை குலுங்க குலுங்க ஆடி அசைந்து அழகாய் கடப்பதென இந்த யானையை ஒரு ஆச்சரியமாய் பார்த்ததுண்டு.
![]() |
பண்டிகையற்ற காலங்களில் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் ஊருக்குள் உள்ள தெருக்களுக்கு பாகன்கள் கூட்டி வருவார்கள். "யானை வரும் பின்னே மணியோசை முன்னே" ன்னு சொல்ற பழமொழிக்கெல்லாம் அர்த்தங்கள் இப்போதான் புரிகிறது. பக்கத்து தெருவில் யானை வரும்போதே அடுத்த தெருவுக்கு மணியோசை கேட்கும், எந்த வேலையா இருந்தாலும் அப்படியே போட்டுட்டு ரோட்டுக்கு வந்துடுவோம். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் யானைமேல் தங்கள் குழந்தையை வைத்து அழைத்துப்போக சொல்வார்கள், குழந்தை பாகனோடு அமர்ந்து கொஞ்ச தூரம் போய் அதே அழகோடு பின்னாலேயே வந்து நிற்கும். பார்க்க அவ்ளோ அழகா இருக்கும். வசதியற்ற வீட்டுக் குழந்தைகள் அம்மாக்களிடம் காசு கேட்டு அடம்பிடித்து வாங்கி வரும் இருபது பைசா, ஐம்பது பைசாக்களை யானையின் தும்பிக்கையில் வைத்து ஆசிர்வாதம் வாங்குவதற்குள் எல்லா வகையான நடனமும் ஆடிவிடுவார்கள். ஒரே ஒருமுறை நான் சிறுவயதில் இந்த யானைக்கு காசு கொடுத்திருக்கேன், பயந்தபடியே போய் நான் கையை நீட்ட அது சாதாரணமாக தும்பிக்கையை நீட்டி காசை வாங்கிக்கொண்டு ஆசிர்வாதம் செய்தது, தும்பிக்கையை தலையில் வைத்ததும் ஏதோ ஒரு பாறை தலையில் மோதியது போல அவ்வளவு கனம், அதன் சொரசொரப்பும், தும்பிக்கையில் இருந்த முடியின் அடர்த்தியும், மூச்சுக்காற்றின் வேகமும் என அத்தனை நெருக்கத்தில் இந்த யானையை தரிசித்த நாள் நினைவுகளில் இருந்து நீங்காமல் இருக்கிறது. இப்போதெல்லாம் கோவில் யானைகள் ஊருக்குள் வருவதில்லை, எங்காவது வழியில் யானைப்பாகன்களைப் பார்த்தால் மெல்லிய புன்னகை உதிர்த்து கடந்து விடுகிறேன்.
அந்த கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் கிளிக்கு தேவை இரண்டு நிமிஷ சுதந்திரமும், இரண்டு நெல்மணிகளும் மட்டுமே அதை வேண்டி, திறக்கும் போதெல்லாம் வெளிவந்து ஏதோ ஒரு சீட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டுக்குள் போய்விடும் கிளி யோசியத்தை அத்தனை ஆர்வமாய் வேடிக்கை பார்ப்போம், ஓரங்களில் கிழிந்த பாய் போன்ற துணியையும் கிளிக்கூண்டையும் தூக்கிக்கொண்டு ஊருக்குள் வரும் கிளி ஜோசியக்காரர்களை அவ்வளவு பிடிக்கும். ஓரளவு வசதியானவர்கள் மட்டுமே ஜோசியம் பார்த்தாலும் அவ்வப்போது வறுமையில் இருப்பவர்களும் மன திருப்திக்காக பார்ப்பார்கள். ஏதோ ஒரு வீட்டு திண்ணையிலோ, வாசலிலோ அமர்ந்து அவர் பாயை விரித்து, சீட்டுகளை வரிசையாக கிடத்தி, குறிப்பு சொல்லும் புத்தகத்தை மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பாடலோடு ஒப்பித்து, காசை கண்ணில் பார்த்தால் மட்டுமே வெளி வர வேண்டுமென்ற பயிற்சி செய்யப்பட்ட கிளியை நோக்கி "அய்யாவோட முக ராசிக்கு நல்ல சீட்டு ஒன்னு எடுத்துக்கொடு ராஜாண்ணோ, அம்மாவோட ராசிக்கு நல்ல சீட்டு ஒன்னு எடுத்துக்கொடு தாயிண்ணோ" சொல்லி மெல்ல அழைப்பார், ஜோசியம் கேட்டவர் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்ததும் கூண்டுக்குள் இருந்து கொஞ்சம் மிரண்டபடி வெளிவரும் கிளி ஒரு சீட்டை எடுத்து அவர் கையில் கொடுத்துவிட்டு அவர் தரும் நெல்மணிகளை வாங்கிக்கொண்டு கூண்டுக்குள் போய்விடும். வந்திருக்கும் படத்திற்கு ஏற்ப அவர் படிக்கும் குறிப்புகளை ஜோசியம் பார்ப்பவர் கேட்டுக்கொண்டிருக்க வேடிக்கை பார்க்கும் எங்கள் பார்வைகளும் கிளியோடு சேர்த்து கூண்டுக்குள் போயிருக்கும். விசில் அடித்து கிளியின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்ப முயற்சித்தாலும் அது கொஞ்சம் மிரண்டபடியே பார்த்துக்கொண்டிருக்கும். குறிப்பு படித்து முடித்து, பாயை மடித்து அவர் கிளம்பும்போது அவர் பின்னாலே நாங்களும் போவோம், தெருமுனை வரை போய்விட்டு திரும்பி வந்து விளையாட ஆரம்பித்துவிடுவோம். ஒரே தெருவில் பத்து பேர் கூட கிளி ஜோசியம் பார்ப்பாங்க, ஒரு தெருவில் ஒருத்தர் கூட பார்க்காமலும் இருப்பாங்க. அது கிளி யார் முகத்தில் விழித்தது என்பதைப்பொருத்தும், கிளி யோசியக்காரர் யார் முகத்தில் விழித்தார் என்பதையும் பொருத்தும் மாறுபடலாம். கிளியின் கூடவே ஒரு குட்டி முயல் அளவு வெள்ளை எலிகளை வைத்தும் யோசியம் பார்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கான ஜோசியத்தை எதை வைத்து பார்ப்பார்கள் எனத்தெரியவில்லை.
உடம்பில் ஒரு குட்டி கவுன் மாட்டிக்கொண்டு, அழகாய் பவுடரும் லிப்ஸ்டிக்கும் போட்டு, நெற்றியில் பெரிய பொட்டு வெச்சி, கழுத்தில் மணி கட்டிக்கொண்டு, காலில் கொழுசுகள் சிணுங்க சிணுங்க வீதிகளுக்குள் கூட்டி வருவார் கட்டிப்போட்டு ஒரு குட்டிக்குரங்கை. குரங்கை பல்டி அடிக்க சொல்லி, ஒரு குண்டாவை தூக்கி தலையில் வைத்து குதிக்க சொல்லி, குட்டி சைக்கிள் ஓட்ட வைத்து, என என்னென்னவோ சொல்லி வித்தை காட்டி வீதி வீதியாக வலம் வரும் அவரோடு நாங்களும் சுத்துவோம். பசி நேரத்தில் தேநீர் கடை வாசலில் ஒரு ஓரத்தில் அமர்ந்து குரங்குக்கு ஒரு பண் வாங்கிக்கொடுத்துவிட்டு அவர் ஒரு டீயை குடிக்கும் காட்சி இன்னும் கண்களுக்குள் அப்படியே இருக்கிறது. எல்லாத் தெருக்களையும் சுற்றிவிட்டு கிடைக்கும் சொற்ப காசுகளோடு குரங்கை தோளில் வைத்துக்கொண்டு அவர் கண்களை விட்டு மறையும் வரை பார்த்துக்கொண்டே இருப்போம். இப்போதெல்லாம் அவர் வேலையை மனைவிகள் எடுத்துக்கொண்டதால் அவர் நினைவுகள் எப்போதாவது இது மாதிரி வந்தால் தான் உண்டு.
நன்றாக பயிற்சி கொடுத்து பழக்கி வைக்கப்பட்ட கரடி ஊருக்குள் வருவதாக கேள்விப்பட்டாலே ஆர்வத்தோடு கொஞ்சம் பயமும் வந்து ஒட்டிக்கொள்ளும். கரடியை கூட்டி வருபவர் கரடியின் அளவில் நாளில் ஒரு பகுதி கூட இருக்க மாட்டார். ஆனால் அவருக்கு கட்டுப்பட்டு அந்த கரடி இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து வரும், தீராத காய்ச்சல், நழுங்கிய குழந்தைகள், இருட்டுக்கு பயப்படறவங்க, தூக்கத்துல உளர்றவங்கன்னு யாருக்கு வேணா கரடி தாயத்து கட்டலாம்னு சொல்லி, ஒரு கருப்பு கயிறையோ, சிவப்பு கயிறையோ எடுத்து கரடியிடம் கொடுப்பார், அது கையில் வைத்து கொஞ்சம் சுத்த சுத்த இவர் ஏதோ மாத்திரம் சொல்லுவார், அப்பறம் அதை வாங்கி சம்மந்தப்படவர்கள் கையிலோ, காலிலோ கட்டி அனுப்புவார். அந்த கரடி உக்காந்திருக்கும் அழகே தனி. நல்லா பொசு பொசுன்னு முடியோட, மொட்டை கண்ணையும், கூர்மையான பற்களையும், நகங்களையும் வெச்சிக்கிட்டு அது பார்க்கும் பார்வை பயமாகவும், சமயங்களில் பாவமாகவும் இருக்கும்.
மாதத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமையிலோ விசேஷ நாட்களிலோ அலங்கரிக்கப்பட்ட பூம் பூம் மாட்டை பிடித்துக்கொண்டு, உறுமி மேளத்தை அடித்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக வருவார் உருமாலை கட்டிய மாட்டுக்காரர். பழைய கதாசிரியர்கள், கவிஞர்கள் வைத்திருக்கும் ஜோல்னா பை போன்ற ஒரு பையை மாட்டிக்கொண்டு, வீடுகளில் கிடைக்கும் அரிசி, பருப்பு, மாட்டுக்கு கொடுக்கும் தீவனம், கொஞ்சம் நாணயங்கள் என தனக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் அதற்குள்ளே ஒரு பொக்கிஷம் போல சேகரிப்பார். அந்த மாட்டை அத்தனை அழகாய் ஒப்பனை செய்திருப்பார், கொம்புகளில் கலர் ரிப்பன்கள், காலில் சலங்கை, மூக்கில் சங்குகளால் ஆன கடிவாளம், முதுகில் ஒரு பொன்னாடை என என்னென்னவோ இருக்கும். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு ஊருகளுக்கு போவதில் தான் அவர் வாழ்வும் அந்த மாட்டின் நாட்களும் நகரும். இப்போதெல்லாம் அந்த மாதிரி மனிதர்களையும் மாடுகளையும் பார்க்க முடியறதில்லை.
திடீரென பக்கத்து தெருவில் இருந்து சத்தம் கேட்டுகிட்டே இருக்கும், பசங்க புள்ளைங்களாம் ஓடுவாங்க. போய் பார்த்தா ஒரு மர நிழலில், சுற்றியும் சிறு வேலி போடப்பட்டு உள்ள நூத்துக்கணக்கான கலர் கோழிக்குஞ்சுகள் கத்திக்கிட்டு ஒன்னுமேல ஒன்னு ஏறிக்கிட்டு குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்குங்க, அப்போ ஒரு ரூபாய்க்கு ஒரு கோழிக்குஞ்சு, வீட்ல அடம்புடிச்சி காசு வாங்கிட்டு வந்து ரோஸ்ல ஒன்னு பச்சைல ஒன்னு வாங்குவோம், கைல காசு அதிகமா இருந்தா எல்லா கலர்லயும் ஒவ்வொன்னு வாங்குவோம். அதை வீட்ல வளர்த்த முடியாது, அது பெருசாகாது, சீக்கிரம் செத்துரும்ன்னு எவ்வளவோ சொல்லுவாங்க, காதுலயே வாங்க மாட்டோமே. அவரோட மல்லுக்கட்டி கலர் மாத்தி அதை ஒரு பொட்டுக்கூடைல போட்டு தினமும் வெளிய மண்ணுல பூச்சி கொத்த விட்டு பார்த்துகிட்டா ஏமாந்த நேரத்துல கழுகு வந்து கொத்திக்கிட்டு போய்டும். அதுக்கு அழுது, சொன்னா கேக்கறியான்னு வீட்ல ரெண்டு மிதி வாங்கி அப்படியே தூங்கி போன நாட்களெல்லாம் சொர்க்கமின்றி வேறென்ன.
சிறு கிராமங்களில், சிறு ஊர்களில் மட்டுமே இது போன்ற மனிதர்களையும் மனிதர்களோடே சேர்ந்து பயணிக்கும் உயிர்களையும் காண முடிகிறது. பெருநகரங்களில் எல்லா வேடிக்கைகளும் குறைந்து விட்டன அல்லது மறந்துவிட்டன. இந்த உலகம் அதிவேகமாக நிறம் மாறிக்கொண்டே வருகிறது. எளிய மனிதர்களையும் அவர்களோடு பழகும் உயிர்களையும் அது சார்ந்த சந்தோஷங்களையும் சட்டென பிடுங்கிக்கொள்கிறது. சமீபத்தில் எங்கள் தெருவில் ஒரு கிளி ஜோசியக்காரர் போனார், அம்மா அவரை கூப்பிட்டு ஜோசியம் பார்க்க சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவரும் கிளியும் மட்டும் மாறியிருந்தார்கள், அந்த கூண்டும், சீட்டுகளும், பாயும், குறிப்புகளும், அவர்களுடைய வாழ்க்கையும் எதுவும் மாறவில்லை.
26 July 2020
கடந்து போவதுதானே வாழ்க்கை
அன்புக்காகவும் பிரியங்களுக்காகவும் ஏங்கும் மனிதர்கள் இங்கு ஏராளம். அதே அன்பையும் பிரியங்களையும் செலவு செய்யத் தெரியாமல் கைவசம் வைத்திருப்பவர்களும் ஏராளம். வழக்கத்தை விட கொஞ்சம் கூடுதலாக காட்டவேண்டிய அன்பை, நேசத்தை வாய்ப்புகளிருந்தும் நாம் எல்லோரிடத்திலும் அதைக் காட்டுவதில்லை. அந்தந்த நேரத்தில் வசப்படும் பொய்களை நம் வசதிக்கேற்ப முலாம் பூசி மழுப்பி விடுகிறோம். காற்றில் உதிரும் சில மலர்களை நினைத்து மரங்கள் வருத்தப்படுவதில்லை, மாறாக இன்னும் இன்னும் பல மலர்கள் பூக்க வேர்கள் தொடர்ந்து உதவுகின்றன. மனிதர்களிடத்தில் காட்டவேண்டிய நேசங்களும் அதைப்போலவே இருக்கணும். இவனால் எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதையும் தாண்டி என் சிறு புன்னகை இவருக்கான நாளை நல்லவிதமாக மாற்றுமென்ற நம்பிக்கை இருந்தால் போதும் கடக்கும் எல்லா மனிதர்களிடத்திலும் ஒரே மாதிரியான புன்னகையால் கை குலுக்கலாம்.
எங்க ஊருல ஒரு பையன் இருக்கான், எத்தனையோ பையன்கள் இருந்தாலும் இவன் கொஞ்சம் வித்தியாசமானவன். அவன் பெயர் ராஜேஷ்ன்னு ஒருமுறை சொன்னான் அதான் உண்மையான பெயரான்னுதெரியல. அவன்கிட்ட எப்போதும் கிலோ கணக்கில் காகிதங்கள், விசிட்டிங் கார்டுகள், நோட்டீஸ்கள், மடித்துவைக்கப்பட்ட கல்யாண அழைப்பிதழ்கள் என கட்டு கட்டாக ரப்பர் பேண்டுகளைப் போட்டு சட்டை பாக்கெட்டுகள், பேண்ட் பாக்கெட்டுகள் மட்டுமல்லாமல் கைகளில் கக்கத்தில் என எல்லா பக்கங்களில் வைத்திருப்பான், ஆனால் யாரிடமும் எதையும் கொடுக்க மாட்டான். எப்போதும் முழுக்கால் பேண்ட், கைகளில் பட்டன் போட்ட முழுக்கை சட்டையோடு இருப்பான். யாராவது டீ, காபி வாங்கிக்கொடுத்தால் குடிப்பான் இன்னும் கொஞ்சம் போய் வறுக்கி, பண், போண்டா, பஜ்ஜிகளும் வாங்கிக்கொடுப்பவர்களும் உண்டு. பவானி கூடுதுறையில் இருந்து பவானி எல்லையம்மன் கோவில் வரை நடந்தே போய் வந்து கொண்டு இருப்பான். அவனை போலீசுக்கு உதவியா சிஐடி வேலை பாக்கறான்னு கூட கிண்டலா சொல்லுவாங்க.
அவன்கிட்ட இருக்கும் காகித கட்டுகளை யாரும் அவ்வளவு சீக்கிரம் தொட்டுவிட முடியாது. ஆனாலும் அன்பானவன், யாரிடமும் கோபப்பட மாட்டான், அநாகரிகமாக நடந்துகொள்ள மாட்டான். இப்போ டச் போன் கூட வெச்சிருக்கான், ஆனால் அதை அத்தனை கவர்களில் போட்டு அவ்ளோ பத்திரமா உள் பாக்கெட்டில் வெச்சிருப்பான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோணுவது, இவனும் மற்றவர்களைப் போல இருந்திருந்தால் இந்நேரம் எப்படி இருந்திருப்பான், இப்போ
இவன் மூன்று வேளையும் சாப்பிடுவானா, எப்பவாவது புதுத்துணி போடுவானா, உடம்பு சரியில்லைனா ஹாஸ்பிடல் போய் வைத்தியம் பார்த்துக்கொள்வானான்னு சாதாரண மனிதர்களுக்கு உண்டான எல்லா கேள்விகளும் வந்து போகும். ஆனாலும் எல்லாக் கேள்விகளையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு எல்லோரும் கொடுக்கும் புன்னைகையிலிருந்து மாறாக கொஞ்சம் கூடுதல் பிரியங்கள் நிறைந்த புன்னகையை அவனுக்கு கொடுப்பேன் அவனும் அதே போன்றதொரு புன்னகையைக் கொடுப்பான்.
என் நண்பர் வீட்ல ஒரு அக்கா இருப்பாங்க, உறவுக்கார பெண்ணான அவங்களை கூட மாட ஒத்தாசைக்கு இருக்கட்டும்னு நண்பனோட வீட்டோட வச்சிருக்காங்க. இப்போ சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் மொபைலை கொடுத்துவிட்டால் அது சமர்த்தாக சாப்பிட்டு விடும். கைப்பேசிகள் வந்திருக்காத காலங்களில் குழந்தைகளை சாப்பிட வைக்க "பூச்சாண்டி வரான்" ன்னு ஒரு சொல்லி சாப்பிட வைக்கும் ஒரு பழக்கமிருந்தது. இப்பவும் கூட அந்த தெருல சின்ன குழந்தைகள் சாப்பிடலனா இந்த அக்கா பேரைச் சொல்லி தான் சாப்பிட வைப்பாங்க. அந்த அக்கா பேரு என்னன்னா "ஆயா பொண்ணு". இது நிச்சயமா அந்த அக்காவோட உண்மையான பேரா இருக்காது, உண்மையான பேர் என்னன்னு அந்த அக்காவுக்கும் கூட தெரியாமல் இருக்கலாம். ஒருமுறை அந்த அக்காகிட்ட "உங்க பேர் என்னங்க அக்கா" ன்னு கேட்டேன், "எதுக்குடா கேக்கற" ன்னு கொஞ்சம் புரியாமை கலந்த கோபத்தோடு கேட்டுட்டு போய்ட்டாங்க.
வீட்டு வேலைகள் செய்து கொண்டே இருப்பதால் எப்போதும் அழுக்கு நிறைந்த உடை, சரியாக வகிடெடுத்து சீவாத தலை, கறை படிந்த பற்கள், கரகரத்த குரல், பயமுறுத்தும் கண்களென அவர்கள் கொஞ்சம் சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் அவங்க அவ்ளோ அழகு. அவங்க மற்றவர்களைப்போல இருந்திருந்தால் இந்நேரம் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளோடு எல்லோரையும் போல ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பார். அதேசமயம் எல்லோரையும் போல இருப்பதைக் கொண்டாடாமல் எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்திருப்பார். இப்போ அவங்களுக்குன்னு பெருசா கனவுகள் இருக்காது, கவலைகள் இருக்காது, இழப்புகள் தெரியாது, மன ரீதியான வலிகள் இல்லாமல், உடல் ரீதியான வலிகள் மட்டும் இருக்கலாம். மூன்று வேளை சாப்பாடும், நல்ல தூக்கமும் இருந்தால் போதுமென நினைத்திருக்கலாம். எப்போதாவது தான் அவங்க சிரிப்பாங்க ஆனால் அந்த சிரிப்பில் அத்தனை அன்பு இருக்கும், வாஞ்சை இருக்கும், வெட்கமும் கலந்தே இருக்கும். எல்லோரும் அவரின் உருவத்தை வைத்து பயந்து விலகி நின்றாலும் பூச்சாண்டிக்கு நிகராக ஒப்பிட்டு அழைத்தாலும் அவங்க இப்போதும், எப்போதும் ஒரு அழகிய தேவதைதான்.
பவானி மேற்குத்தெரு வட்டாரத்தில் "மாது"ன்னு சொன்னா நெறைய பேருக்கு தெரியும். சாதாரண மனிதர்களிடமிருந்து மாறுபட்ட குணங்கள், கொஞ்சம் முரட்டுத்தனம் நிறைந்த வளர்ந்த குழந்தை மனம், பயம் தெரியும் வெட்கம் தெரியாது, பசி தெரியும் பாவம் தெரியாது, நிழல் தெரியும் வெய்யில் உரைக்காது, வேகம் தெரியும் வேலை தெரியாது, கணுக்காலுக்கு மேலே தூக்கி போட்டிருக்கும் பேண்டை அரைஞாண்கயிறு கீழே விழாமல் பிடித்துக்கொள்ளும், கைகள் மடக்கிய கசங்கிய சட்டையில் எங்காவது ஒரு பீடி ஒளிந்திருக்கும். எப்போதாவது எண்ணெய் பார்க்கும் தலையும், வெத்தலை பாக்கு போட்ட வாயும் பதினாறு வயதினிலே சப்பாணியை நினைவுபடுத்தும்.
எல்லா மனிதர்களைப்போலவும் பிறப்பெடுத்து வந்தவர் தான், வாழ்க்கை மாற்றிப்போடும் கணக்குகளில் கொஞ்சம் பிணக்குகள் உண்டாவதைப்போல, இலக்கியங்கள் கொட்டிக்கிடக்கும் போது கொஞ்சம் பிழைகளும் இருப்பது போல இவரும் இருக்கிறார். மாதுவுக்கு சரியா பேச வராது, அரை குறை வார்த்தைகள் அவ்வப்போது உடைந்து உடைந்து வரும், அவர் வாய் பேசும் வார்த்தைகளை விட கைகாட்டும் சைகைகள் தான் அதிகமிருக்கும். பண்டிகை, திருவிழா காலங்களில் மட்டும் புதுத்துணிகள் போட்டிருப்பார், "என்ன மாது புதுத்துணி போல"ன்னு யாராவது கேட்டா ஓரத்துல கொஞ்சம் வெட்கத்தோடு சிரிப்பார். கோவில் திருவிழாக்களில் கைகளை மேலே தூக்கியபடி வானுக்கும் பூமிக்கும் குதித்தபடி இவர் ஆடும் ஆட்டத்திற்கு "மாது ஆட்டம்னே" பேர் இருக்கு. இவர் காலில் செருப்பு போட்டு நடந்து நான் பார்த்ததே இல்ல, எவ்ளோ வெயில் அடிச்சாலும் வெறுங்காலில் தான் நடப்பார். ஆற்றுக்கு, அணைக்கு குளிக்க போனா சட்டையை கழற்றி கோவணம் கட்டிட்டு குளிச்சிட்டு அப்படியே ஈரத்தை பிழிந்து போட்டுக்கிட்டு வந்துடுவார், வீட்டுக்கு வரத்துக்குள்ள அது காய்ஞ்சிரும்.
ஆமா... இவருக்குன்னு வீடு இருக்கு, தம்பி, தம்பி மனைவி, அவங்க குழந்தைங்கன்னு நெறைய உறவுகள் இருக்காங்க. நல்லா பார்த்துக்கறாங்க. ஊர் பெரிய மனிதர்களிடம் நல்ல அடையாளம் இவருக்கு உண்டு. மற்றவர்களுக்கு இல்லை என்பதைக்கூட மாதுக்குன்னு கேட்டா கொடுப்பாங்க. அப்பப்போ டீக்கடைக்கு வருவார் யாராவது டீ வாங்கி கொடுத்தா குடிப்பார், ஒரு பீடி வாங்கி பற்றவைத்துவிட்டு வேக வேகமா புகையை விடுவார், தனக்குள்ள ஏதோ பேசிட்டே இருப்பார். மதிய நேரத்துல எங்காவது திண்ணைல தூங்குவார், மழை வந்தா ஏதாவது திண்ணை, முற்றத்துல இருப்பார், அப்பறம் வீட்டுக்கு போய்டுவார். நம்மைப்போன்ற சக மனிதர்களைக் காணும் போதெல்லாம் அவரது வேலை, சம்பளம், வசதி, பேர், புகழ் போன்ற விஷயங்களை ஒட்டி நமக்குள் ஒரு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் இவரை போன்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவரும் நம்மள மாதிரி நல்லா இருந்திருந்தா இந்நேரம் எப்படி இருப்பார், என்னென்ன பண்ணிக்கிட்டு இருந்திருப்பார், இவர் வண்டி ஓட்டிட்டு போனா எப்படி இருப்பார், குழந்தைகளை எப்படி பார்த்துப்பார்ன்னு அவர்கள் நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்க்கையை நான் நினைத்துப்பார்ப்பதுண்டு.
இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பலர் இருக்கிறார்கள், கிழிந்த சட்டை, பேண்டை அணிந்துகொண்டு சாலையின் இருபக்கங்களிலும் போக்குவரத்தை சரிசெய்யும் சிறுவன், சமயங்களில் பீடியை இழுத்தபடி புகைவண்டியாய் மாறிப்போவான், எப்போதாவது ஒரு தேனீருக்காக கையேந்தும் அவனுக்கு வாழ்வு எல்லா மொழிகளிலும் உணர்த்தும் வலி என்பது பசி மட்டுமே. கேரிபேக்கில் கிழிந்த வெத்தலைகளையும் உடைந்த வெட்டுப்பாக்குகளையும் சேகரித்துக்கொண்டே கூன் விழுந்த உடலை சுமந்து எங்குங்கோ அழைந்துகொண்டும், ஏதோ ஒரு வீட்டு வாசலிலோ திண்ணையிலோ கிழிந்த பாய் போல தான் உடலை ஒடுக்கி படுத்திருக்கும் அந்த பாட்டியும், நடக்க முடியாமல் கைகளில் தட்டேந்தியபடி சாலையை தவழ்ந்தே கடக்கும் ஒருவருமென ஒரு சின்ன ஊருக்குள் இத்தனை ஜீவன்கள் வலி சுமந்தபடி காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான அபிப்ராயத்தைக் கொடுப்பதில்லை. சிலர் தங்களது தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும், சிலர் தங்களது கிண்டல்களுக்கு பயன்படுத்திக்கொள்ளவும், சிலர் இவர்களின் குறைகளைக்காட்டி தங்களை பெரியதாய் அடையாளப்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள் இவை எதையும் தெரிந்துகொள்ளலாம் இவர்கள் இதையெல்லாம் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்.
அப்படிக்கடந்து போவதில்தானே வாழ்வின் அர்த்தம் நிறைந்திருக்கிறது.
27 June 2020
வியர்வையில் பூக்கும் மலர்கள்
ஒரு பொருட்டல்ல என்பதை மனிதர்கள் எல்லா தருணங்களிலும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு திரும்பும் வழியெங்கும் அருகருகே கடை விரித்தபடி அமர்ந்திருக்கும் வயதான மனிதர்களை கவனித்திருக்கிறீர்களா? பொங்கல், தீபாவளி, கோவில் திருவிழா போன்ற நாட்களில் முக்கிய சாலைகளில் முளைக்கும் வாழைக்கன்று, கலர் கோலப்பொடி, மஞ்சக்கோம்பு, கரும்பு, சேமியா சர்பத், குடைதூரி, கட்டில் துணிக்கடை, பலூன் கடை என வரிசையாக புதுப்புது கடைகள் அழகழகாய் முளைத்திருக்கும். இவர்களெல்லாம் கடைவிரித்து ஒரே நாளில் பெரும் பணக்காரர்களாகவோ, செல்வச் சீமான்களாகவோ, சீமாட்டிகளாகவோ மாறிவிடப்போவதில்லை, மாறாக உழைத்து உழைத்து களைத்தாலும் மீண்டும் உழைப்பின் மூலமாக மட்டுமே ஓய்வெடுக்கவும் கற்றுக்கொண்டவர்கள் தான் அந்த வயதான தலைமுறை மனிதர்கள்.
வாழ்க்கை எப்போதெல்லாம் புரட்டிப்போட்டு அடிக்கிறதோ, எப்போதெல்லாம் என்னடா வாழ்க்கையிது என புலம்ப வைக்கிறதோ, எப்போதெல்லாம் ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது என கேட்க வைக்கிறதோ அப்போதெல்லாம் நான் நினைத்துக்கொள்வது வாழ்வின் வழிகளெங்கும் பார்த்து பார்த்து மனமெங்கும் நிரப்பி வைத்திருக்கும் இந்த வயதான உழைப்பின் மனிதர்களைத்தான். வண்டியை எடுத்துக்கொண்டு ஊருக்குள் ஒரு சுற்று வருவேன், கடக்கும் சாலைகளெங்கும் காணும் வயதான உழைப்பாளிகள் தங்கள் புன்னகை மூலமோ, தோற்றத்தின் மூலமோ, அணிந்திருக்கும் உடைகளின் மூலமோ வாழ்க்கை எப்போதும் ரசிக்கக்கூடிய ஒன்று எனவும், எந்த நிலையிலும் வாழ்ந்தே தீர வேண்டும் என்றும் உணர வைப்பார்கள்.
அப்படி ஒரு நாள் வண்டியில் சுற்றிக்கொண்டிருக்கும் போதுதான் பவானி மேற்குத்தெரு நான்கு சாலையின் சந்திப்பில் 60 வயதுகளைக் கடந்த அந்த இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் நான் சிறு வயதிலிருந்தே பார்க்கும் சேமியா சர்பத் விற்பவர், இன்னொருவர் குழந்தைகளுக்கான குட்டி ராட்டினம் சுற்றுபவர்.
எல்லோரும் ஓய்வெடுக்கும் அந்த ஞாயிற்றுக்கிழமையில் கொஞ்சம் மழை மேகம், கொஞ்சம் இளம் வெய்யில் சுமக்கும் அழகிய காலையை தங்கள் உழைப்புக்காக வார்த்திருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை வார்த்துக்கொடுக்கும் சர்பத் வண்டியையும் குடை ராட்டின தூரியையும் வெவ்வேறு திசைகளை நோக்கி நிறுத்தியிருந்த போதும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவசரத்தில் அவர்களை பலமுறை கடந்துபோனதுண்டு, அதுவொரு ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெதுவாக அவர்களிடம் நெருங்கி பேச்சு கொடுத்தேன்.
"இப்போ எவ்ளோங்க அண்ணா தூரிக்கு?"
"ஊருக்குள்ள வந்தா 5 ரூபாய் தம்பி கோவில் விசேஷம், திருவிழானா 10, 20 வாங்குவோம்"
"இப்போ எப்படி அண்ணே இருக்கு இந்த தொழில், வாழ்க்கை எல்லாம்?"
"முன்ன மாதிரி இல்ல, ஏதோ போகுது தம்பி, வேற வேலை தெரியாதுன்னு பண்ணிக்கிட்டு இருக்கேன்"
அவரிடம் பேசிக்கொண்டே ராட்டினத்தை போட்டோ எடுக்கிறேன், "இந்தா.. அப்டியே இதையும் போட்டோ எடேன்.." என்கிறார் சர்பத் வண்டிக்காரர். கண்டிப்பா எடுப்பேன்னு சொல்லி ஆயத்தமானதும், "இரு இரு நானும் நிக்கறேன்னு" ஒரு குழந்தையின் குதூகலத்தோடு சொல்லி ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து சர்பத் போட்டு நீட்டுவதைப்போல புன்னகைத்தபடி போஸ் கொடுக்கிறார். அதுதான் அந்த நாளில் அவரின் முதல் புன்னகையாக கூட இருக்கலாம்.
"இப்போ சர்பத் எவ்ளோங்க அண்ணா"
"20 ரூபாய்"
"முன்ன விட இப்போ இந்த தொழில் எப்படி இருக்குங்க"
"நெறைய கூல்ட்ரிங்ஸ் வந்துருச்சு இப்போலாம் ரொம்ப கம்மியாதான் வியாபாரம் ஆகுது, பாரு காலைல இருந்து இன்னும் யாரும் வாங்கல, இனிமேல் தான் ஊருக்குள்ள போவேன்... ஏதோ போகுது தம்பி" என்றார்.
"சரிங்கண்ணே... போய்ட்டு வரேன் பார்த்துக்கோங்க..!" என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து நகர்ந்ததும் பின்னோக்கி சுழன்ற என் வாழ்வின் ராட்டினத்தில் 25 வருடங்களுக்கு முன்னால் இதே சர்பத்காரர் வண்டியை சுற்றி அத்தனை பேர் நின்றிருப்பார்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் இவரின் வருகைக்காவே காத்திருந்தவர்களும் உண்டு. வாங்கி திங்க வாரம் முழுவதும் கொடுக்கும் காசுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து, இந்த தூரிக்காக காத்திருந்தவர்களில் நானும் ஒருவன். தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் இவர்களை கடந்து போகும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை, இவர்களிடம் பேசிக்கொண்டே புகைப்படம் எடுத்த என்னை ஒருமாதிரி பார்த்தவாறே கடந்து போனார்கள். இந்த சேமியா சர்பத்தையும், குடை ராட்டினத்தையும் இப்போது இருக்கும் நகரத்து பிள்ளைகள் அனுபவிக்க முடியுமா? அல்லது நகரங்கள் நோக்கி நகர்ந்துவிட்ட கிராமத்து பிள்ளைகளிடம் இதன் நினைவுகள் எஞ்சி இருக்குமா? நாமே நினைத்தாலும் இத்தனை வயதுக்குப் பிறகு அந்த குடை ராட்டினத்தில் அமர்ந்து விளையாடத்தான் முடியுமா? வாழ்க்கை சிரித்தபடி வழங்கிவிட்டு முறைத்தபடி வாங்கி வைத்துக்கொள்ளும் பல விஷயங்களில் இவைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
தெருக்களுக்குள் புகுந்து விற்கும் பொருளின் பெயரை ராகமாய் பாடி, காந்தக்குரலில் வீட்டுக்குள் இருப்பவர்களை வீதிக்கு வரவைத்து விற்பவர்கள் பெரும்பாலும் நம்ம ஊரில் மட்டும் தான் இருப்பார்கள். அவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும், அவரு மனைவிக்கு 65கிட்ட இருக்கும் ரெண்டு பேரும் கோலப்பொடியை மூட்டை மூட்டையாய் எடுத்துக்கிட்டு ஒற்றை மாட்டு வண்டியில் ஊருக்குள் வருவார்கள். அவர் வண்டியை ஓட்டுவார் அந்தம்மா கோலப்பொடியை படியில் அளந்து விற்பார்கள். அவர் அந்த கோலப்பொடியை விற்க கூவும் அழகுக்கே வாங்கலாம் அப்படி இருக்கும் அவர் குரல். அந்த குரலில் அத்தனை கம்பீரம் இருக்கும், இன்னும் நான் எவனையும் நம்பி இல்லை என்னும் கர்வம், உழைப்பாளி என்னும் ஆற்றல், எனக்கு இன்னும் வயசாகல என்னும் நம்பிக்கை, இந்த வயதிலும் உழைக்க வேண்டுமென்ற ஆர்வம் என அவ்வளவு வசீகரத்தை வைத்திருக்கும் அவரை நான் வெகுவாக ரசித்ததுண்டு. கண்ணாடி போட்டபடி அழுக்கு வெள்ளை வேட்டி, கிழிந்த பனியன், முண்டாசு என ஒரு அய்யனார் குதிரையில் போவது போல அவர் மாட்டு வண்டியை ஓட்டி வரும் அழகே தனிதான். அந்தம்மா வருபவர்களிடம் கோலப்பொடியை கொடுத்து காசை வாங்கி சுருக்குப்பையில் வைத்துக்கொண்டு "போலாம்"னு சொல்லி நகருவதை இப்போது நினைத்தால் தேவைதைகளுக்கு அழகென்பது வயதில் இல்லை என்பது புரிகிறது.
வாழைப்பழம், மைதா மாவு, ஏலக்காய், டால்டா எல்லாம் போட்டு அரைத்த மாவை கட்டம் கட்டமாக நிறைந்திருக்கும் மூடிய பணியார கல் போன்றதொரு பாத்திரத்தில் ஊற்றி இரண்டுபக்கமும் மாற்றி மாற்றி திருப்பி வேகவைத்து ஓரங்களை வெட்டிக்கொடுப்பார் அந்த அண்ணா. ஒவ்வொரு தெரு முக்கிலும் அவர் வந்து நின்றுவிட்டால் கூட்டமாக வந்து காத்திருந்து வாங்கிட்டு போவாங்க. பாலம் பாலமாக வெந்து நான்கு பாகமாக உப்பியிருக்கும். இதன் பெயரோ என்னென்ன பொருட்கள் சேர்ப்பார்கள் என்ற விவரங்களெல்லாம் தெரியாமல் இது வரும் போதெல்லாம் அடம்பிடித்து வாங்கி தரச்சொல்லி ஒவ்வொரு கட்டமாக கடித்து ரசித்து ருசித்த நியாபகங்கள் நிழலாடுகின்றன.
ஆண்டுகள் பல கழிந்தபின் மேலை நாடுகளில் மிகவும் பிரபலமான உணவாக கருதப்படும் இதன் பெயர் "வாஃப்பில்" எனச் சொல்கிறார்கள்.
நினைவுகளின் அலமாரியில் இருந்து தொலைந்து போன அவரையும் அவர் விற்கும் தின்பண்டத்தையும் பல வருடங்கள் கழித்து பார்க்க நேர்ந்தது ஒருமுறை, அவரிடம் பேச்சு கொடுத்ததில் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் இழப்புகளும், வலிகளும் இவருக்கும் இருந்ததை அவர் குரல் உணர்த்தியது. முப்பத்தைந்து ஆண்டுகளாகவே இதே தொழிலை அவர் அத்தனை நேசித்து செய்கிறார். அதனால் தானோ என்னவோ 25 வருடங்கள் கழித்தும் அந்த ருசி மாறாமல் அப்படியே இருந்தது. இரண்டு ரூபாய்க்கு விற்ற அது 15 ரூபாயாக மாறியிருந்தது. ஆனால் மாறாத அந்த ருசிக்கும், மனக்குளத்தில் தூண்டில் போட்டு நினைவுகளை மீட்டுக்கொடுத்ததற்கும் என்ன விலை கொடுப்பது.?
பீட்ஸாக்களும் பர்க்கர்களும் இப்போது வந்தவை, 35 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு தின்பண்டத்தை தயாரித்துக்கொடுத்த இது போன்ற எளிய மனிதர்களின் வாழ்க்கைத்தரம் அத்தனை பெரிதாய் மேம்படவில்லையென்றாலும், சொற்ப வருமானமே வந்தாலும் கூட தனக்குத் தெரிந்ததை மிக நியாயமாக நேசித்து செய்யக்கூடியவர்கள் எல்லா ஊர்களிலும் வலம் வந்துகொண்டே இருக்கிறார்கள். வளர்ச்சி என்ற பெயரில் இது போன்ற எத்தனையோ சிறு வியாபாரிகளை, உழைப்பாளிகளை, எதார்த்தமான மனிதர்களை, உடலுக்கு நல்லது செய்தும் தீனிகளை இழந்துவிட்டோம். அந்த வகையில் இழப்பு நமக்கு மட்டுமல்ல நம் அடுத்த தலைமுறைகளுக்கும் தான்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க தெருவுல ஒரு பாட்டு சத்தம். சத்தம்னா "சத்தமா", எங்கியோ கேட்ட பாட்டு சத்தம் காற்றில் கலந்து கலந்து பெரிதாகி வருது, "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா" ன்னு பாட்டு சத்தம் வந்த வாசலை எட்டிப்பார்த்தால் எழுபது வயசு பெரியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கூடையில் வைத்து அம்மாவிடம் வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டிருந்தார். படித்த பெரிய பெரிய ஆளுமைகள் உள்ள கடைகளின் விளம்பரங்களை கேசட்டில் குரல்பதிவு செய்து கோவில் திருவிழா நேரங்களில், பண்டிகை காலங்களில், முக்கிய விசேச தினங்களில் ஒளிபரப்புவது வழக்கம். அதுபோலவே இவர் இந்த வயதில் அறிவியல் தொழில்நுட்பத்தை எத்தனை அழகாய் பயன்படுத்துகிறார் என்பதை நினைத்த போது ஆச்சரியமாக இருந்தது. அவர் வெள்ளரிக்கா மட்டுமல்லாமல இன்னும் பலவற்றை விற்பனை செய்வார் சீசனுக்கு தகுந்தமாதிரி. இப்போதும் என்னென்ன விற்பனை செய்கிறாரோ அதற்கு தகுந்த பாடலை அல்லது குரல்பதிவை ஒளிபரப்பி வண்டியில் போய் விற்றுவிட்டு வருவார்.
உழைப்பின் மீது பெரும் காதல் வைத்திருக்கும் இந்த எளிய மனிதர்களின் வாழ்வுதான் எத்தனை அழகானது. தான் செய்யும் தொழிலை எத்தனை நேசிக்கிறார்கள். இத்தனை வயதில் இப்படி உழைக்கிறார்களென்றால் இவர்களின் சின்ன வயதில் எப்படி இருந்திருப்பார்கள், மனைவியின் பிரிவோ, மகன்களின் கோபமோ, மருமகள்களின் பிடிவாதமோ, தொழிலின் மீது விழுந்து பெருத்த நஷ்டமோ, சொந்த பந்தங்களின் கைவிடலோ என ஏதோ ஒன்று இவர்களை நகர்த்தி நகர்த்தி இந்த உழைப்பின் மீது கொண்டுவந்து ஓய்வெடுக்க வைத்திருக்கலாம். கடந்து வந்த வாழ்வை ஒருகணம் திரும்பிப்பார்க்கும் வேளையில் இவர்களின் வழிகளெங்கும் வியர்வையில் நனைந்த உழைப்பின் வேர்கள் நம்பிக்கை கிளைகளெங்கும் வெற்றியின் பூக்களை மலரவிட்டிருக்கும்.
#உழைப்பு
#எளிய_மனிதர்கள்
#பவானிமக்கள்