13 April 2017

நீங்களும் உங்க ஜனநாயகமும்

உங்களிடம் இன்னும்
லத்திகளும் துப்பாக்கிகளும்
மீதமிருக்கின்றன அதையும்
அப்பாவிகள் மீது பிரயோகியுங்கள்

பள்ளிகளுக்கும் கோவிலுக்கும்
அருகில் ஆட்சியரின் அனுமதியோடு
சாராயக்கடை திறப்புவிழா
நடத்துங்கள்

அம்மணமான விவசாயிகளிடம்
முண்டாசுகள் அவிழாமல் இருக்கின்றன
அதை பிடுங்க ஆயுதப்படையை அனுப்புங்கள்

உரிமைக்காக போராடும்
மாணவர்களின் மீது
உங்கள் கையாலாகாத்தனத்தை
கட்டவிழுங்கள்

பெண்களிடமும்
பெரியவர்களிடமும்
வன்முறையை நிகழ்த்தி
உங்கள் வீரத்தை
மெச்சிக்கொள்ளுங்கள்

இன்னும் வாகனங்களும்
வாழ்க்கையும் மிச்சமிருக்கின்றன
அதையும் தீயிட்டுக் கொளுத்துங்கள்

இறுதியில் இழப்பீடென
எதையாவது அறிவித்து அதையும்
உங்கள் சட்டைப்பையில்
திணித்துக்கொள்ளுங்கள்

விவசாயிகளை மதிக்காத நாட்டில்
மக்களை மதிக்காத மாநிலத்தில்
மனிதனாய் வாழ நாதியற்ற ஊரில்

தமிழ் புத்தாண்டென்ன
ஆங்கிலப் புத்தாண்டென்ன
போங்கடா நீங்களும்
உங்க ஜனநாயகமும் ...!



மெளனத்தின் சத்தம்

அன்பின் அடுக்குகளில்
என்னை இன்னும் இன்னும்
உயர்த்துகிறது படைப்பு ...!

மார்ச் மாதத்திற்கான
"மின் இதழ் - 11" (01.04.2017)இல்
எனது கவிதையும்

என் கவிதையை தேர்வு செய்த
படைப்பு குழுவுக்கு
அளவில்லா நன்றிகளும்
அழகான வடிவமைப்புக்கு
வற்றாத வாழ்த்துகளும் ...!
***************************
ரகசியங்கள் நிறைந்த
ராத்திரியின் நடுநிசியில்
அடர் மெளனத்தை குலைக்கிறது
கோடங்கியின் குடுகுடுப்பை சத்தம்

இரண்டு வீதி தாண்டி
நீளும் ஒரு குறுகிய சந்துக்குள் கேட்கிறது
ஊளையிடும் நாயின் சத்தம்

வெக்கை நிமித்தமாய்
வெளித்திண்ணையில் புரண்டு படுக்கிறது
ஒரு பெரியவரின் இருமல் சத்தம்

முக்கிய சாலையின் வழியே
சுழலும் விளக்கோடு வேகமாய் விரைகிறது
அவசர ஊர்தியின் அபாயச் சத்தம்

இரைதேடும் இரவில்
பறந்தபடியே பயமாய் கேட்கிறது
ஒரு ஆந்தையின் அலறல் சத்தம்

பாதிக்கதவு சாத்தியபடி
விற்கப்படும் தேநீர்க் கடையிலிருந்து சூடாய்க் கசிகிறது
இளையராஜாவின் பாட்டுச் சத்தம்

முழுதாய் மூடிய கதவுகளின்
சாவித் துவாரத்தின் வழியே
காற்றில் கசிகிறது ஒரு
முத்தச் சத்தம்

இத்தனையும் மீறி இப்போதும்
யாராவது வருவார்களென்ற நம்பிக்கையில் ஒலிக்கிறது
குல்ஃபி ஐஸ் விற்பவனின் சைக்கிள் மணிச்சத்தம் ...!



எப்படிச் சொல்ல...?


பெரு நகர பேருந்தில் 
நரக பயணத்தில் 
பெண்ணாய் படும் 
அவஸ்தைகளை 
எப்படிச் சொல்ல...?

இருக்கைகள் நிறைந்த 
காலை வேளையில் 
கிடைக்கும் இடைவெளியில் 
என்னை நிறுத்திக்கொள்ள
முயலும் போராட்டத்தை 
எப்படிச் சொல்ல...?

உடைக்குள் ஊடுருவி 
உடல் தேடும் ஒருவனிடம் 
உடலுக்குள் மனுசி என்ற 
மனசொன்று இருப்பதை 
எப்படிச் சொல்ல...?

மல்லிகை கருகும்படி 
முதுகில் மூச்சுக்காற்றை 
ஊசியாய் இறக்கும் ஒருவனிடம் 
உனக்கும் என் வயதிலொரு 
சகோதரி இருப்பாளென 
எப்படிச் சொல்ல...?

கடக்கும் சாக்கில் 
கம்பியை பிடித்தபடி 
பின்னுரசும் ஒருவனிடம்  
பிசுபிசுப்பின் ஈரக்கசிவை 
எப்படிச் சொல்ல...?  

வெக்கை தகிக்கும் வியர்வையில்
வழிந்திறங்கும் துளிகளில் 
வாசம் நுகரும் ஒருவனிடம் 
உதிரம் கசியும் வலியை 
எப்படிச் சொல்ல...?

காலதாமதத்திற்கு காரணம் கேட்டு 
கைப்பேசியில் வந்து குதறும் 
மேலாளருக்கு 
"அந்த மூன்று நாட்களில்"
அலுவலகம் வர கொஞ்சம் தாமதமாகுமென்பதை 
எப்படிச் சொல்ல...???


கடந்தகால கவலைகள்

பேட்டர்ன் லாக் போடப்பட்ட 
தொடுதிரைக் கைப்பேசியை 
விடுவிக்க தெரியாமல் 
வெத்தலையைப்போல் 
தடவும் அம்மாவுக்கு அதை
திறந்து கொடுக்கிறேன்

கேலரிக்குள் குவிந்து கிடக்கும்
புகைப்படங்களை
அரிசி புடைக்கையில் தள்ளிவிடும்
சிறு கற்களைப்போல
இடப்பக்கமாய் தள்ளிவிட்டு ரசிக்கிறார்

மிகப்பிடித்த படமொன்றை
கீரைக்கட்டை விலக்கி
பழுத்த இலை களைவதைப்போல
அழகாய் ஜும் செய்து பார்க்கிறார்

ஒரு கலர் படத்தில்
வெள்ளைப் புடவையுடன்
முதுமை சுமக்கும் தன் அம்மாவை
பார்த்து அன்பில் கசிகிறார்

இறுதியில்
பேரன் பேத்திகளின் புகைப்படங்களோடு
நீளும் நிமிடங்களில்
நிதானமாய் மறக்கிறார்
கடந்தகால கவலைகளையும்
நிகழ்கால நடப்புகளையும் ...!




தவறிய அழைப்பு

ஆழ்ந்த உறக்கத்தின்
அர்த்த ராத்திரியில்
கைப்பேசிக்குள் விழுந்து கிடந்தது
ஒரு தவறிய அழைப்பு

நடுநிசியின்
பெரு மெளன அமைதியிலும்
என் செவிப்பறைக்கு எட்டாத நொடியில்
அது தன் சத்தத்தை
நிறுத்தியிருக்கக்கூடும்

சங்கீதம் வழிந்தபடி
எழுப்பிய அலாரம்
அரைக்கண்ணில் பார்க்க வைத்தது
அந்த தவறிய அழைப்பை

விபரங்கள் ஏதுமற்ற
அந்த புது எண்ணின் மீது
குவியும் கவனத்தில்
தொலைந்துபோன நட்பும்
உடைந்துபோன உறவுகளும்
வந்து போகின்றன

ஆர்வத்தோடும் அன்போடும்
திருப்பி அழைத்தபோது
"நீங்கள் அழைத்த எண் தற்போது
அணைத்து வைப்பட்டிருக்கிறதென" வரும்
பதிவுக்குரலால்

நீளும் சந்தேகத்தையும்
குமுறும் குறுகுறுப்பையும்
பெருகும் பயத்தையும்
எதைக்கொண்டு நிரப்புவது ...???

#குறிப்பு: புலிகேசி படத்தில் வரும் "ஒரு புறாவுக்கெல்லாம் போரா? பெரிய அக்கப்போராகவல்லவா இருக்கிறது" என்பதுபோல்...
"ஒரு மிஸ்டு காலுக்கெல்லாம் கவிதையா ..?" எனக் கொதிப்பவர்களுக்கு ....
"வேற வழியில்லை போற போக்குல அப்டியே படிச்சிட்டு போங்க என்ன இப்போ....!"