05 February 2017

நாட்காட்டியின் கடைசி தாள்

கிழித்து கசக்கி எறிய
காத்திருக்கிறது கூர் நிறைந்த
ஆணியில் அறையப்பட்ட
நாட்காட்டியின் கடைசி தாள்
கடிகாரத்தின் நொடிமுள் சுழற்சியில்
மெல்ல மெல்ல இறந்து
கொண்டிருக்கிறது நிகழ்காலம்
ஒரு வருடத்தையே
வழியனுப்பி வைக்க பரபரப்பாய்
ஓடிக் கடக்கின்றன
உலகின் கால்கள்
காயங்களை..., இழப்புகளை...,
சோகங்களை..,தோல்விகளை...
இந்த கடைசி பக்கத்தில்
எழுதிவிட்டு நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்
பிறக்கும் புத்தாண்டு சிறக்கும்...!


தராமல் போன முத்தங்கள்

மார்கழி மாதத்தின்
அதிகாலைக் குளிராய்
எங்கும் வியாபித்திருக்கிறாய்
நீ
இழுத்து போர்த்திக்கொள்ளும்
கம்பளியாய்
ஆவி பறக்க பருகும்
தேநீரின் குடுவையாய்
பருவம் தப்பிப் பொழியும்
மெல்லிய மழையாய்
உரசிய கைகளுக்குள்
உண்டாகும் இளம்சூடாய்
இருப்பதும் நீயேதான்
நீளும் கனவிலும்
விடியத்தொடங்கும் இரவிலும்
இன்னும் மிச்சமிருக்கிறது உறக்கம்
நீ தராமலே போன
முத்தங்களைப்போல ....!!!

தேவதைக் கதை

"ஒரு கதை சொல்றீங்களா?"
"ம்...ஒரு ஊர்ல ..."
"ஒரு பாட்டி வடை சுட்டாங்களா?"
"இல்ல ஒரு குட்டி தேவதை இருந்தாளாம்"
"ம்ம் அப்பறம்"
"அந்த தேவதை ரொம்ப குறும்பாம்"
"என்னைமாதிரியேவா ...?"
"ம்.. அந்த குட்டி தேவதையை எல்லாருக்குமே பிடிக்குமாம், அவளுக்கு சாக்லேட்டனா ரொம்ப பிடிக்குமாம், பிங்க் கலரும் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். ஸ்கூல் போய்ட்டுவந்து ரொம்ப சேட்டை பண்ணுமாம்"
"ஸ்கூலா ..? அந்த தேவதைக்கு யாரு பாடம் சொல்லித்தருவா?"
"இன்னொரு பெரிய தேவதை தான்"
"ஓ..அந்த குட்டி தேவதை வீடு எங்க இருக்கு?"
நிலவை வெட்டிய வெளிச்சத்தில்
நட்சத்திரங்கள் தலையிலிடிக்கும்
வானவில் திருப்பத்தில்
அன்புக்கூரை வேய்ந்த
சங்கீத படிகளை கொண்ட
அழகான முதல் மாடியில்
 சொல்லி முடிப்பதற்குள்...
தேவதைக் கதை கேட்டபடி
உறங்கிப்போனவளின்
விரிசல் விழாத கனவுகளில் சிறகு விரித்தபடி
சில தேவதைகள் வரக்கூடும்
அவள்தான் அந்த குட்டி தேவதையெனவும்
அது அவள் வீடுதானென்பதையும்
அவள் கனவுகளைக் காயப்படுத்தாமல்
 அவளுக்கு எப்படி புரியவைப்பது...?

பூ சுமக்கும் புன்னகை


நகரின் சாலையோர சாயங்காலத்தில்
நடைபாதையில் அமர்ந்து
பூ கட்டி விற்றுக்கொண்டிருந்தாள்
சிறுமியொருத்தி
மொட்டுவெடிக்கத் தொடங்கும்
தன் கவலைகளை விரலிடுக்கில் அடுக்கி
சுருக்கிக்கொண்டிருந்தாள் பூ கட்டும் கயிறால்
உடைகளில் தெரியும் வறுமையை
யாருக்கும் தெரியாமல் விரட்ட முனைகிறாள்
விற்கும் பூ வாசத்தால்
தன்னைக்கடக்கும் கால்களை நிராகரித்து
நீளக்கூந்தல்களை கவனிக்கிறாள்
பூவற்ற தலைகளை திருப்ப
பூப் பூவென கூவுகிறாள்
கூடை நிறைந்த பூக்களை
யாராவது வாங்கிவிடுவார்கள்
என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாள்
யாருமே விலைபேசிவிட முடியாத
தன் புன்னகையைச் சுமந்தபடி ...!!!

உதடுகளால் அடிக்கோடிடு

மொழிகள் தயாரித்த வார்த்தைகளை
கடன் வாங்கி கோர்க்கிறேன்
நீ கவிதையென ரசிக்கிறாய்

முற்றுப்புள்ளியில்
முடிந்துவிடுமென நினைத்தேன்
நீ முத்தம் வைத்து தொடர்கிறாய்

தலைகோதியதாய்
சிலிர்க்கிறது என் கவிதைகள்
நீ தொடுதிரையில்
தொட்டுத் தொட்டு படிப்பதால்

உனக்கு பிடித்த வார்த்தைகளை
உதடுகளால் அடிக்கோடிடு

பிடிக்காத வார்த்தைகளை
விரல்களால் தடவிக்கொடு...!!!