30 May 2016

நந்தி மலை பயணம்




மிகப்பிடித்த பாடலொன்றையோ
படமொன்றையோ ரசித்துப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் " கொஞ்சம் கடைக்குப்போய் பால் வாங்கிட்டு வா " என வீட்டில் யாராவது சொல்லும்போது பக்கத்து தெருவுக்கு போக கொஞ்சம் வெறுப்புடனும் நிறைய கோவத்துடனும் பைக்கை அப்படி உதைக்க நேரிடும், நடந்து போகும் தூரத்தில் இருக்கும் கடைக்குப்போக பைக்கோ சைக்கிளோ தேவைப்படுகிறது.

சில கிலோமீட்டர்கள் நடந்தே ஒரு பயணம் போக வேண்டுமென  வருகிற போது அந்த சூழ்நிலையை கையாளும் பக்குவத்தை எது கொடுக்கிறது? அந்த இலக்கை அடைய எது தூண்டுகிறது? அடைந்த பின்பு வரும் ஒரு பெருமிதத்தை புத்துணர்ச்சியை எது தக்கவைக்கிறது?

எங்கள் அலுவலகம் பெங்களூரில் உள்ள நந்தி மலை உச்சியை நடந்தே அடைய வேண்டுமேன ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மலை அடிவாரத்திலிருந்து உச்சி வரை 7 கிலோமீட்டர்கள் தான், பாதை வழியாக முதலில் உச்சி தொடும் முதல் மூன்று ஆண்களுக்கும் முதல் மூன்று பெண்களுக்கும் பரிசென அறிவித்திருந்தார்கள் பரிசுக்கென இல்லையெனினும் ஒரு பயண அனுபவமாக இருக்கட்டுமென நண்பர்களோடு பயணிக்க தொடங்கினோம் உச்சியை நோக்கி.

பவானியிலிருந்து பழனிவரை கூட பாதயாத்திரை போய் வந்திருக்கிறோம் வயதும் மனதும் ஒத்துழைத்த நாட்களில்.
இப்போதைய சூழலில்  நானெல்லாம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதே கடினமென நினைத்தபடிதான் நடக்கத் தொடங்கினேன் ஆனால் இயற்கையை ரசித்தபடியும் இலக்கை துரத்தியபடியும் நடக்க  நடக்க தூரங்கள் குறையத்தொடங்கின. புகைப்படங்களெடுத்தபடி முன்னேறுகிறோம் எங்களுக்கு நிகராய் மேகங்களும் முன்னேறுகின்றன.

கால்கள் நடக்க நடக்க காலங்களில் பின்னோக்கி  கேள்விகளால் நிரம்புகிறது மனது அந்த காலத்தில் இத்தனை உயரத்தை எத்தனை குதிரைகளில் அடைந்திருப்பார்கள்?
இந்த மரங்களில் எத்தனை பறவைகள் கூடுகட்டியிருக்கும்?
எந்த விதையில்  இந்த மரம் இப்படி வளர்ந்திருக்கும்? மலை உச்சியின் கோட்டை கட்டவும் அந்த பெரிய குளம் கட்டவும் எத்தனை கழுதைகள் கல் சுமந்திருக்கும்? இங்கு வாழும் குரங்குகளுக்கு போதுமான உணவு கிடைத்துவிடுமா? அந்த பெரிய தேன்கூட்டை யாரும் தொல்லை செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்களா? தலைக்குமேல் போகும் மேகம் பொசுக்கென மழை பொழியுமா? இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் பதில் கிடைக்காமலே அடிமனதின் பள்ளத்தாக்கில் விழுந்து தொலைந்துவிடுகின்றன.

ஒருவழியாய் உச்சியை அடைந்த போது வாழ்க்கை ஒரு உண்மையை உணர்த்தியது , "முயற்சியோடு முன்னேற நினைப்பவர்களையும் வலிதாங்கி தடைதாண்ட துடிப்பவர்களையும் வாழ்க்கை உயரத்திற்கு கொண்டு செல்கிறது".

இன்னும் இன்னும் பயணிக்கணும்
புது உயரங்களைத் தொடவும்.
புது அனுபவங்களைப் பெறவும்.

பயணிப்போம் ...!

---தனபால் பவானி

07 May 2016

ஆண்களின் வரம்

"கொழம்பு நல்லா இருக்கு" என்பதே
அம்மாக்கள் பெரும் மிகச்சிறந்த பாராட்டு ..!
**************************************
மொத்த மெத்தையும் கொடுக்காத
தூக்கத்தைக் கொடுப்பதுதான்
அம்மாவின் சேலைத் தொட்டில்..!
**************************************
எந்த நிலையிலும்
தன்னை நேசிக்கும் பெண்ணாய் அம்மா
இருப்பது ஆண்களின் வரம் ..!
**************************************
குடும்பம் என்னும் புத்தகத்தில்
அம்மா என்பவள் அடிக்கோடிட்ட
மிகப்பிடித்த வரி ..!
**************************************
மாளிகையானாலும்
குடிசையானாலும் சமையலறைக்கு
பிடித்த ஆள் அம்மா மட்டுமே ..!
**************************************
யாருமற்ற  வீட்டில் எப்போதும்
நிறைந்திருக்கும் அம்மாவின்
வாசம் ..!
**************************************
எத்தனை முறை முயற்சித்தாலும்
மிக அரிதாய்க் கிடைப்பது தான்
அம்மாவின் வெட்கம் ..!
**************************************
எந்த மொழியில் அழைத்தாலும்
அழகாகும் சொல் அம்மா ..!
**************************************
அன்னையர் தின வாழ்த்துக்கள்..!


06 September 2014

தொடர்வண்டி நினைவுகள் ....!





உன்னோடு 
அதிக நேரம் செலவழித்த 
அந்த தொடர்வண்டி நிலையத்தின் 
நடைமேடை திண்ணையில் அமர நேர்ந்தது ஒருநாள்...

அன்று 
கண்கள் மூடிய தருணம்
நினைவுகள் பின்னோக்கிச் சுழல..

''அப்போது என் விரல் கோர்த்தபடி
அருகில் அமர்ந்திருந்தாய் நீ
அழகான புன்னகையோடு ...

நீ பேசிய வார்த்தைகளை காதுகளும்
உன் அழகை கண்களும் உள்வாங்கிக்கொண்டிருக்க
அன்பான காதல் வெளிவந்து கொண்டிருந்த
ஆசிர்வதிக்கப்பட்ட நிமிடங்கள் அது .....!!!

இப்போது நீ இல்லாத அதே இடத்தில்
உன் நினைவுகளின் விரல் கோர்த்து அமர்ந்திருக்கிறேன்...

பெருங்கூச்சலிட்டு வந்த ஒரு தொடர்வண்டி
என் நினைவுகளைக் கலைத்து
பயணிகளை இறக்கி விட்டு
திரும்பாமல் போய் விட்டது உன்னைப்போல ....

தண்டவாளங்கள்
இன்னும் அப்பிடியே இருக்கின்றன
என்னைப்போல ....!!!

22 August 2014

உறங்காத இரவுகளும் உன் நினைவுகளும்..!


உறக்கம் தொலைத்த இரவுகள்
உணவாய்த் தின்கிறது
உன் நினைவுகளை....

இருள் படிந்த என் அறையின்
ஜன்னல் வழியே வந்து விழும்
வெளிச்சக்கீற்றுகள்
தோண்டி எடுக்கின்றன
உன் வெள்ளைச் சிரிப்புகளை...

கைப்பேசியின் உள்டப்பியில்
இருந்து அழிக்கப்படும் தேவையற்ற
குறுந்தகவல்களைப்போல்
அவ்வளவு சுலபமாய்
அழிக்க முடியவில்லை
இதயத்திலிருந்து
உன் கடைசி பார்வையை ...

அருகில் உறங்கும் நண்பனின்
அலைபேசி அலறும் அர்த்த ராத்திரி
மீட்டெடுக்கிறது
நீ அழைத்த நிமிடங்களை....

கொசுக்கள் வந்து கடிக்கும் 
தருணங்கள் முன் வைக்கிறது 
உன் விலை மதிப்பில்லாத 
முத்தங்களை... 

தூரத்து மசூதியில் ஓதும்
ஒரு குரல், விடிந்து விட்டதை
விவரிக்கும் போது
தொடங்குகிறது என் உறக்கம் ...!





சென்னை தினம் .... !!!


இது தமிழ் நாட்டின் தலை நகரம் மட்டுமல்ல இந்திய இளைஞர்களின் தலையெழுத்தையும் மாற்றும் இடம்...!!!

கண்கள் நிறைய கனவுகளோடும், மனது நிறைய லட்சியங்களோடும் தினம் தினம் ரயில் ஏறும் கால்கள் எத்தனை...? படிப்பு தந்த அறிவை மூளையில்  சுமந்துகொண்டு 
உடம்பு தரும் பசியை வயிற்றில் சுமந்து கொண்டு ஒரு டீ யோடும் ஒரு தம்மோடும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் மனங்கள் எத்தனை...? நகல்கள் நிறைந்த ஃபைல்களை  தூக்கிக்கொண்டு நனைந்த கைக்குட்டையால் முகத்தை துடைத்துக்கொண்டு நேர்காணளுக்கான  இடத்தின் முகவரி தேடி அலையும் முகங்கள் எத்தனை...? கிராமத்து அம்மா அப்பாவின் அன்பை துறந்து உடன்பிறந்தவர்களோடு செல்ல சண்டைக்கு ஏங்கி திறக்காத சினிமாவின் கதவுகளை மீண்டும் மீண்டும் தட்டிக்கொண்டிருக்கும் விரல்கள் எத்தனை...? தொடர்பு எல்லைக்கு அப்பால் வந்ததால் உடைந்து போன நட்புகள் எத்தனை...? ஒரு சிறு வெற்றியெனும் கிடைக்காமல் திருமணம் செய்ய கூடாதென இளமையை தொலைத்த இதயங்கள் எத்தனை...?

சொந்த ஊர்களில் அடுத்த தெரு மளிகை கடைக்கு  கூட போகாத அழகு பெண்கள் IT கம்பெனிகளில் இரவெல்லாம் விழித்து  வேலை பார்க்கிறார்கள், தோழிகளோடு ஆலமர ஊஞ்சல் ஆடியவர்களுக்கு சுழலும் நாற்காலிகள் அந்த சந்தோசத்தைக் கொடுக்குமா? அம்மாவின் மடியில் தலை சாயும் சந்தோஷ நிமிடங்களை அமெரிக்க டாலர்களால் கொடுக்க முடியுமா ?மெகந்தியின் வளைவுகளில் மயங்கும் மனம் மருதாணியின்  வாசத்தை மறக்குமா? வாய்க்கால்களில் முங்கிக் குளித்த ஈரத்தை கால்களை நனைக்கும்  மெரினா கடல் அலை கொடுக்குமா? நகரப்பேருந்துகளில் சிக்கிச் சிதையும் வேளைகளில் மாட்டு வண்டியில் பயணித்த நியாபகம் வராமலா போகும்? போகிற போக்கில் தெருவோர பிள்ளையாரைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் போது ஊர் திருவிழாக்கள் கண்களுக்குள் வந்து போகாது?

இவை அத்தனையையும் பறித்துக்கொண்டு இந்த பெரு நகர வாழ்க்கை கொடுத்தது என்ன? 

பள்ளிக்கு போகும்  மகனுக்கு ஆட்டோவில் டானிக் கொடுக்கும் ஒரு தாய் , நடைபாதையில் கடைவிரித்து மகளுக்காக புத்தகம் சுமந்து செல்லும் ஒரு தகப்பன், பேரனுக்கு முந்தானை குடை பிடிக்கும் ஒரு பாட்டி , பேத்திக்கு இளநி வாங்கிக்கொடுக்கும் ஒரு தாத்தா, வயதான அம்மாவை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் ஒரு மகன் , தாமதமாக வரும் காதலிக்காக சாக்லேட்டோடு காத்திருக்கும் காதலன் , பிறந்த நாள் பரிசு கொண்டு வரும் காதலனுக்காக முத்தங்களோடு காத்திருக்கும் காதலி, காலையிலேயே குடித்துவிட்டு மட்டையாகிக் கிடக்கும் 'குடிமகன்' இவர்களோடு சிக்னல்களில் சிக்கிகொள்ளக்கூடாது என பறக்கும் வாகனங்கள்,ஐந்து நிமிட தாமதத்திற்காக அரை மணி நேரம் வாங்கும் திட்டு , எல்லாம் சரியாக இருந்தும் கொடுக்கப்படும் லஞ்சம் , தண்டவாளம் கடக்கையில் வரும் மரணம், நடைமேடையில் நடக்கையில் வரும் பயணச்சீட்டு பரிசோதனை, சில்லறைக்காக நடத்துனரிடம் நடத்தும் சண்டை இப்படி  எல்லாம் கடந்து வீட்டுக்குள் நுழைகையில் சம்பாதித்ததை விட இழந்தது அதிகமாக இருக்கும் .

Inline image 1

ஆனாலும் இதே சென்னை தான் கடற்கரை சாயங்காலங்களிலும், சினிமா படப்பிடிப்புகளிலும் , வடபழனி முருகன் கோவிலும், தியாகராய நகர் தெருக்களிலும் , தொங்கிக்கொண்டு போகும் தொடர்வண்டிகளிலும் , திருவல்லிக்கேணி மேன்சன்களிலும், MGR , அண்ணா சமாதிகளிலும்,
மகாபலிபுர மணல் மேடுகளிலும், கோயம்பேடு எலைட் வெளிநாட்டு சரக்குகளிலும்,சத்யம் சினிமா தியேட்டர்களிலும் , சிட்டி சென்டர், போனிக்ஸ் மால்களிலும், கண்ணகி சிலை பக்க  புத்தாண்டுக் கொண்டாட்டங்களிலும் கலங்கரைவிளக்கத்தின் உச்சியிலும் இன்னும் இன்னும் வாழ்க்கை மிச்சமிருப்பதை உணர்த்திக்கொண்டு தான் இருக்கிறது.

இங்கே வலிகளுக்கு நிகராய் சந்தோசங்களும் ,பயங்களுக்கு நிகராய் கொண்டாட்டங்களும்,  கண்ணீருக்கு நிகராய்  புன்னகையும் , நரகத்திற்கு நிகராய் சொர்க்கமும், தோல்விகளுக்கு நிகராய் வெற்றிகளும், ஏமாற்றங்களுக்கு நிகராய் வாய்ப்புகளும் இறப்புக்கு நிகரான வாழ்க்கையும் இன்னும்  இருக்கின்றன.

சாதனை படைக்க சென்னை வருவதை விட சென்னையில் இருப்பதே பெரிய சாதனைதான்.
வாழ்க்கை பயணத்தில் சிகப்பு விளக்கு எறிந்தால் கொஞ்சம் பொறுமையாய் காத்திருங்கள் 
உங்களுக்கான பச்சை விளக்கும் கண்டிப்பாய் ஒளிரும் .....!!!

வாழ்க்கைக்காக சென்னை வந்தவனின்  வாழ்த்துக்கள் ...!!!